பெங்களூரு: உலகம் முழுவதும் இணையம் மூலம் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அலிபாபா நிறுவனத்துடன் ஆந்திரா அரசு சேர்ந்து செயல்படவிருக்கிறது. தற்போது அலிபாபா.காம் இந்தியாவில் காலடி பதிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்க அலிபாபா நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக ஆந்திரப்பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்நிறுவனம் கையெழுத்திடவுள்ளது.
இதற்காக ஆந்திரப்பிரதேச மாநில தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் நரா லோகேஷ் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகிலாபிரியா ஆகியோருடன் அலிபாபா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அலிபாபா நிறுவனத்துக்கும் ஆந்திர அரசுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் அலிபாபா நிறுவனம் மூன்று நிமிடத்தில் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்தது.

