நடுக்கடலில் பரபரப்பு: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்

நடுக்கடலில் பரபரப்பு: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்

1 mins read

நாகை: தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இத்தாக்குதல் நடந்துள்ளது. இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.

இரும்புக் கம்பி, கட்டை ஆகியவற்றைக் கொண்டு கொள்ளையர்கள் நடத்திய தாக்குத லில் மீனவர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்திய கொள்ளையர்கள், ஏற்கெனவே பிடித்து வைத்திருந்த மீன்களையும் அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கொள்ளையர்கள் சென்ற பின்னர் தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள், கரையில் இருந்த சக மீனவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டனர்.