மதுரையில் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு: விரைவில் அறிவிப்பு

மதுரையில் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு: விரைவில் அறிவிப்பு

1 mins read

இந்த ஆண்டில் அல்லது அடுத்த ஆண்டில் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டு முதன்முறையாக உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதன்பின் சென்னை (1968), பாரிஸ் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), மொரீ‌ஷியஸ் (1989), தஞ்சாவூர் (1995) என இதுவரை மொத்தம் ஒன்பது முறை உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 2010ஆம் ஆண்டில் கோவையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முயன்றார். ஆயினும், போதிய கால அவகாசம் இல்லை எனக் கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது. இருந்தாலும், செம்மொழி மாநாடு என வேறு பெயரில் கருணாநிதி மாநாட்டை நடத்தி முடித்தார். 2015ல் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடந்து முடிந்த நிலையில், பத்தாவது மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது குறித்து மாநில அரசு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.