சென்னை: திமுகவின் எதிர்கால செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கும் பொருட்டு கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளார் மு.க.ஸ்டாலின். இத் தகைய சூழ்நிலையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தானும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் அடுத்த வாரிசுத் தலைவராக உதயநிதியை வார்த் தெடுக்கும் நோக்கத்துடனேயே அவரை தீவிர அரசியலுக்கு அழைத்துவர மு.க.ஸ்டாலின் திட் டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளார் ஸ்டாலின்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக பணிகளை செம்மைப் படுத்துவது குறித்து மாவட்ட வாரியாக, ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை உள்ள நிர்வாகிகள் மற்றும் திமுகவின் அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

