கோவை: செல்ஃபி (தம்படம்) எடுக்க முயன்ற 19 வயது கல்லூரி மாணவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். கோவையைச் சேர்ந்த சுஜிஸ் என்ற அம்மாணவனின் தாய் கூலித் தொழிலாளியாக உள்ளார். சுஜிசின் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு போய்விட்டார்.
தனியார் கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்த சுஜிஸ், நேற்று முன்தினம் தன் நண்பர்களுடன் முத்துக்கவுண்டன்புதூர் அருகே உள்ள ரயில் பாதையில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த சரக்கு ரயில் அவரது தலையின் பக்கவாட்டுப் பகுதியில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுஜிஸ், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

