பஞ்சாப் நேஷனல் வங்கியில் $2.4 பில்லியன் மோசடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் $2.4 பில்லியன் மோசடி

1 mins read

இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பைக் கிளை ஒன்றில் 11,360 கோடி ரூபாய்க்கு (S$2.4 பில்லியன்) முறைகேடான, அங்கீகரிக்கப் படாத பரிவர்த்தனைகள் இடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த மோசடி மூலம் அந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் சிலர் பலன் பெற்றுள்ளதாகவும் வெளி நாடுகளில் உள்ள சில வாடிக்கையாளர்களுக்கு முன் கூட்டியே பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் அந்த வங்கி கூறியது.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, தண்டனை பெற்றுத் தர ஏதுவாக அமலாக்கப் பிரிவுக்கும் சிபிஐக்கும் எல்லா விவரங்களையும் அனுப்பி விட்டதாக வங்கி தெரிவித்தது. இது தொடர்பில், 'செபி' எனப்படும் இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மோசடிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்கெனவே சில வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. இந்திய வைர வியாபாரி நீரவ் மோடி, வேறு சிலருடன் சேர்ந்து அந்த வங்கியில் மோசடி செய்து 282 கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் கூறப் படுகிறது. அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.