ஈரோடு: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பதற்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ விஜயதாரணி மீது தமிழக காங்கிரஸ் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தி உள்ளார். உச்ச நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்தது மோசமான முன்னுதாரணம் என ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.
"ஆளும் அதிமுக அரசின் இந்தச் செயல்பாடு ஆட்டோ சங்கர், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோரின் உருவப்படங்களை திறப்பதற்குச் சமமானது. போக்குவரத்துத் துறையில் உள்ள ஊழலை ஒழித்தாலே அத்துறை நல்ல லாபத்தில் இயங்கும். அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது," என்றார் இளங்கோவன்.

