பாஜகவின் முகவராகவே மாறிய ஓபிஎஸ்: தினகரன் தாக்கு

பாஜகவின் முகவராகவே மாறிய ஓபிஎஸ்: தினகரன் தாக்கு

1 mins read

சென்னை: தமிழகத்தில் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் அனைவரும் பாஜகவுக்கு முகவர்களைப் போல் செயல்படுவதாக ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார். பாஜக தலைமையும் பிரதமர் மோடியும் அதிமுகவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என நினைத்து செயல்படுவதாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சாடினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முழுக்க முழுக்க பாஜகவின் முகவராக மாறி விட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஜெயலலிதா இறந்த தினத்தன்றே சசிகலா முதல்வராகப் பதவி ஏற்றிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

தம்மை சசிகலா முதல்வராக பொறுப்பேற்கச் சொல்லி இருந்தால் அதை யாரும் தடுத்திருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா முன் வரவில்லை. இதனால் ஜெயலலிதா மீது பாஜக கடும் கோபம் அடைந்தது. அந்தக் கோபத்தை அவர் மீது காட்ட முடியவில்லை. அதனால் ஜெயலலிதாவுக்கு எங்கள் (சசிகலா) குடும்பம் 30 ஆண்டுகள் ஆதரவாக இருந்து வந்தது என்பதால் எங்களிடம் கோபத்தைக் காட்டுகின்றனர்," என்றார் தினகரன்.