பெங்களூரு: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இப்போது தான் உண்மைகளை வெளியே சொல்ல ஆரம்பித் திருப்பதாக ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறி உள்ளார். உண்மைகள் வெளிவருவதன் எதிரொலியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்றும் அவர் ஆருடம் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தண்டிக்கப் பட்ட சசிகலா, இளவரசி, சுதா கரன் ஆகியோர் கடந்த ஓராண்டு காலமாக பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சசிகலாவை, சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அவரை யடுத்து இளவரசியின் மகன் விவேக் உள்ளிட்டோரும் சசி கலாவைச் சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் இரண்டு மணி நேரம் தனது குடும்பத்தாருடன் பேசிய சசிகலா பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்திய தாகத் தெரிகிறது. தமிழக அரசியல் சூழ்நிலை, அதிமுக தலைமையுடனான மோதல், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சசிகலா குடும்பத்தாரைக் குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அவரது குடும்பத்தார் பேசியதாகக் கூறப்படுகிறது.

