சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால், தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் பெருகும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித் துறைதான் விற்பனை செய்யும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து ஆதிமூலம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதையடுத்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழகத்தின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்யக்கூடாது என யாரையும் தடுக்கவில்லை. ஆனால் அதேநேரம் அதை ஒழுங்குபடுத்தி முறையாக விற்பனை செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்," என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

