சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை யில் தமிழகத்துக்கான நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் குறித்த திட்டங்கள், நீர்வளம் மற்றும் விவசாய பாசனத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்காரி, சென்னை - சேலம் இடையே ரூ.10,000 கோடியில் பசுமை விரைவுச் சாலை அமைக்கப்படும் என்றார். நாட்டின் முதல் பசுமை விரைவுச் சாலையானது மகாராஷ் டிர மாநிலம் மும்பை - புனே நகரங்களுக்கு இடையே அமைக் கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு அடுத்தபடியாக, தமிழகத் தில் சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமை விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
"சென்னை, சேலம் இடையே 8 வழிப்பாதை அமைக்கப்படும். திருவண்ணாமலை, அரூர் வழி யாகச் செல்லும் இச்சாலையில் பயணிப்பதன் மூலம் பயண தூரம் 60 கிலோ மீட்டர் அளவு குறையும். "மேலும், பயண நேரமும் 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாகக் குறையும். சாலை அமைக்கும் பணிகள் இன்னும் 2 மாதங்களில் துவங்கும்," என்றார் அமைச்சர் நிதின் கட்காரி. இது தவிர, கரூர் - கோவை, மேலூர் - தஞ்சாவூர், மதுரை,- தனுஷ்கோடி, மாமல்லபுரம், புதுச்சேரி உள்ளிட்ட 6 வழித் தடங்களில் பசுமைச் சாலைகள், வட்டச் சாலைகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்ட தாகக் குறிப்பிட்ட அவர், ரூ.43 ஆயிரம் கோடி செலவில் இந்தச் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

