கமல் கட்சிப் பெயருக்கு எதிர்ப்பு: தேர்தல் ஆணையத்தில் மனு

கமல் கட்சிப் பெயருக்கு எதிர்ப்பு: தேர்தல் ஆணையத்தில் மனு

1 mins read

நெல்லை: நடிகர் கமல்ஹாசன் தன் கட்சிக்காக பதிவு செய்யக் கோரியுள்ள 'மக்கள் நீதி மய்யம்' என்னும் பெயரானது மக்கள் நீதிமன்றம் (லோக் ஆயுக்தா) என்பதுடன் ஒத்துப்போவதாக நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான வலம்புரி மோசே சுட்டிக் காட்டி உள்ளார். எனவே கமல்ஹாசன் தொடங்கியுள்ள கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என வலியுறுத்தி அவர் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார். "மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் செயல்பட்டு வரும் நிலையில், நீதிபரிபாலன முறையின் அமைப்பைப் போன்ற ஒரு பெயரை, புதிதாகத் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்குத் தருவது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற வீண் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்," என வலம்புரி மோசே தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.