இந்தியாவில் நடக்கும் பொதுத் தேர்தல்களில் இப்போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறைக்குப் பதிலாக இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு களைப் பயன்படுத்தும் முறைக்கு மாறுவது பற்றி விவாதிக்க தான் தயார் என்று பாஜக அறிவித்து இருக்கிறது. பாஜகவின் ஆகப்பெரிய அரசியல் எதிரியாக இருக்கின்ற காங்கிரஸ் கட்சி, வருங்காலத்தில் நடக்கும் பொதுத் தேர்தல்களில் இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகளை நடப்புக்குக் கொண்டுவரும்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது. இதனையடுத்து பாஜக தன் கருத்தை நேற்று தெரிவித்தது.
"கருத்திணக்கம் அதிக அள வில் இருந்ததன் காரணமாகவே வாக்குச்சீட்டுகளுக்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் நடைமுறை நடப்புக்கு வந்தது என்பதை காங்கிரஸ் கட்சிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். "இப்போதுகூட மறுபடியும் வாக்குச்சீட்டுதான் தேவை என்று ஒவ்வோர் அரசியல் கட்சியும் முடிவு செய்யும்பட்சத்தில் அது பற்றி பரிசீலிக்க பாஜக தயார்," என்று அந்தக் கட்சியின் பொது செயலாளர் ராம் மாதேவ் தெரிவித்ததாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டது. காங்கிரஸ் கட்சி தன்னுடைய 84வது குழு கூட்டத்தின்போது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

