ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு

1 mins read

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப் பிரதேசத்தில் ராமர் ரத யாத்திரை தொடங்கியது. அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கல்விப் பாடத் திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப் பட்டது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக வந்த ரத யாத்திரை நேற்று தமிழகம் வந்தடைந்தது. ரத யாத்திரை ஸ்ரீதிருவில்லிப் புத்தூர், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதியாக ராமேசுவரம் சென்று ரத யாத்திரை முடிவடைகிறது. ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் நெல்லை மாவட்டம் முழுவதும் வருகிற 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. யாத்திரையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபடச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஜவாஹி ருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.