திருச்சி: சென்னை, திருச்சி விமான நிலையங்களில் விடிய விடிய சோதனை மேற்கொள்ளப் பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. திருச்சியில் உள்ள அவசர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், சென்னை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள தாகவும் அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் என்றும் கூறினார்.
இதனால் காவல்துறையினர் உடனடியாக சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய பாது காப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்களுடனும் மோப்ப நாய் உதவியுடனும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

