தேனி: அணு சம்பந்தமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து எதிர்க்கப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். உத்தமபாளையத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அத்திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும் நீர் நஞ்சாகும் என்றும் கவலை தெரிவித்தார். "நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் வன உயிரினங்கள் வெளியேறும். நில அதிர்வுகள் ஏற்படலாம். இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.
எனவேதான் இந்தத் திட்டத்தை தொடக்கம் முதற்கொண்டே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்த்து வருகிறது," என்று திருமாவளவன் விளக்கம் அளித்தார். மதுரை அருகில் உள்ள வடபழஞ்சியில் அணு உலைக்கழிவு தொழிற்சாலை அமைக்கப்படுவதையும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தையும் எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் சாதிய வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தலித்துக்களுக்கு எதிராக உள்ளதாகத் தெரிவித்தார்.

