காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதி செய்ய ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் விதித்த கெடு மார்ச் 29ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து, குழு ஏதும் அமைக்காத மத்திய அரசு மீது 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கை தமிழக அரசு நேற்று தொடுத்தது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி தமிழகமும் புதுச் சேரியும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வேளையில், கர்நாடகாவும் கேரளாவும் "உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது காவிரி மேலாண்மை வாரியமல்ல; குழு," என்று எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. அடுத்த மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அது தனக்கு பாத கமாக அமையுமென பாஜக அரசு கருதுவதாகவும் அதனால் வாரி யம் அமைப்பது குறித்த முடிவை அது தாமதப்படுத்துவதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, திட்டத்தை அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திடமே, 'திட்டம்' என்று குறிப்பிட்டது 'வாரியமா?' அல்லது 'குழுவா?' எனத் தெளி வான விளக்கம் கோரி மனுவை மத்திய அரசு நேற்று சமர்ப்பித்தது. மேலும், கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அந்த மனு வில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

