காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இந்தியாவின் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை அது நாடியுள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இம்மாதம் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுக மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று நடத்தியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்திய நேரப்படி காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றுக்கு அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமை தாங்கினர். காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள அழுத்தம் தமிழக மக்களுக்குத் தெரியும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். இது ஒருபுறம் இருக்க, தமிழகம் முழுவதும் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டது. கடையடைப்புப் போராட்டம் இந்திய நேரப்படி காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெற்றதாக அறியப்படுகிறது. இப்போராட்டத்தில் தமிழகமெங்கும் கிட்டத் தட்ட 2.1 மில்லியன் கடைகள் பங்கெடுத்ததாகக் கூறப்படுகிறது. காவிரிப் பிரச்சினை தமிழகத்தில் தீவிரமடைவதை இந்தப் போராட்டங்கள் காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

