பெல்ஜியம், நார்வே, சுவீடனுக்கு அதிக இந்தியர் குடியேற்றம்

பெல்ஜியம், நார்வே, சுவீடனுக்கு அதிக இந்தியர் குடியேற்றம்

1 mins read

கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 425,000 இந்தியர்கள் 84 நாடுகளில் குடியுரிமைகளைப் பெற்றுள்ளனர். 2017ல் 92,000க்கும் அதிகமான இந்தியர்கள் வேறு நாடுகளின் குடியுரிமைகளைப் பெற்றனர். அதற்கு முந்திய ஆண்டில் 115,000 பேர் வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றனர். அதேநேரத்தில் வழக்கமாக இந்தியர்களை ஈர்க்கும் நாடுகளில் அவர்கள் குடியுரிமை பெறுவது குறைந்துள்ளது. சுவீடன், நார்வே, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2016ஆம் ஆண்டுடன் ஒப்பிட 2017ல் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் எண்ணிக்கை 2016 உடன் ஒப்பிட 12% குறைவு. பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை 2016 உடன் ஒப்பிட 2017ல் முறையே 30%, 9%, 55% குறைந்துள்ளது. அதேவேளையில் சுவீடன், நார்வே நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை முறையே 160%, 218% கூடியுள்ளது. இந்தியரின் முதல் தேர்வாக இருந்த நாடுகளின் அரசியல் சூழ்நிலை மாற்றங்கள், அதிகரித்து வரும் உள்ளூர் மக்களின் அழுத்தம் போன்றவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.