கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்புக் கேட்ட ஆளுநரின் விளக்கத்தை ஏற்கமுடியாது: நிருபர்

1 mins read
011b3523-3319-498d-bc69-c99452126777
-

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதன் முடிவில், 'தி வீக்' சஞ்சிகையின் நிருபர் லட்சுமி சுப்ரமணியம் ஆளுநரிடம் வினா ஒன்றை எழுப்பினார். "பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் உங் களுக்குத் திருப்தி இருக்கிறதா?," என்பதுதான் அந்தக் கேள்வி. செய்தியாளர் கூட்டம் முடிந்து எழுந்துகொண்டிருந்த ஆளுநர் இந்தக் கேள்வியை எழுப்பிய லட்சுமியின் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றார். அதனால் ஆத்திரமுற்ற லட்சுமி ஆளுநரின் செயலுக்கு தமது டுவிட்டரில் கண்டனம் தெரி வித்தார். பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பின. இது ஒரு சர்ச்சைக்குரிய சம்பவமாக இந்தியா முழுவதும் ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தப் பெண் செய்தியாளருக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை ஆளுநர் அனுப்பினார். அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக டுவிட்ட ரில் லட்சுமி தெரிவித்தார். "மேதகு ஆளுநர் அவர்களே சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த சம்பவத்துக்கு தாங்கள் வருத்தம் தெரிவித்து எழுதிய கடிதம் எனக்குக் கிடைத்தது. உங்கள் மன்னிப்புக் கடிதத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இருப்பினும், எனது கேள்விக்குப் பாராட்டு தெரி விக்கும் வகையிலேயே அவ்வாறு நடந்ததாக தாங்கள் கூறுவது ஏற்கத்தக்கதல்ல," என்பதுதான் அவரது டுவிட்டர் தகவல். விவகாரம் இன்னும் புகைந்துகொண்டிருப்பதை இது காட்டுகிறது.

சஞ்சிகை நிருபரின் கன்னத்தைத் தட்டும் ஆளுநர். படம்: தமிழக ஊடகம்