பாட்னா: இம்மாத இறுதியுடன் பணியிலிருந்து ஓய்வுபெறவுள்ள தந்தையைக் கொன்றுவிட்டால் கருணை அடிப்படையில் அவரது ரயில்வே வேலை தனக்குக் கிடைத்துவிடும் என்று திட்டம் தீட்டி, அதைச் செயல்படுத்த முயன்ற மகனை போலிஸ் கைது செய்தது. கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம்போல் பணிக்குச் சென்ற திரு ஓம் பிரகாஷ் மண்டலை மர்ம நபர்கள் சுட்டதில், அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சிசிடிவி காணொளிகளை ஆராய்ந்த போலிஸ், துப்பாக்கியால் சுட்ட ரவி ரஞ்சன், சுனில் மண்டல் என்ற இரு ஆடவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், திரு ஓம் பிரகாஷைக் கொல்லச் சொல்லி அவருடைய மகன் பவன் மண்டல் தங்களை அணுகியதாகவும் அதற்காக ரூ.2 லட்சம் பேசி, முன்பணமாக ஒரு லட்ச ரூபாயை அவர் கொடுத்ததாகவும் கூறினர். பலமுறை போட்டித் தேர்வு எழுதியும் வேலை கிடைக்காததால் 28 வயதான பவன் கடைசியில் இப்படிக் குறுக்குவழியை நாடியதாக போலிசார் தெரிவித்தனர்.

