சென்னை: காவிரிப்படுகை நிலப் பகுதிகளில் துணை ராணுவப் படையினரை திடீரென ஆயிரக் கணக்கில் கொண்டு வந்து குவித்திருப்பது காலங்காலமாய் அம்மண்ணில் வாழ்ந்து வரும் மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நெற்களஞ்சிய மான காவிரிப் படுகையில் மக்க ளின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பு போன்ற பேராபத்துமிக்கத் திட்டங்களைப் புகுத்தி, காவிரிப் படுகை மாவட்டங்களை பாலை வனமாக்க மத்திய அரசு சதித் திட்டம் தீட்டி உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். இவ்விஷயத்தில் மத்திய அரசு எவ்வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்றும், மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வில்லை என்றும் சீமான் சுட்டிக் காட்டி உள்ளார்.
"தனியார் நிறுவனங்களுக்கு எரிகாற்று எடுக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, துணை ராணுவத்தைப் பயன் படுத்தி, இயற்கை வளத்தைச் சுரண்டும் அந்த நாசகாரத் திட் டங்களைச் செயல்படுத்த, அத்திட் டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களைத் தாக்கி அச்சுறுத்த, அம்மக்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி ஒடுக்க முடிவு செய்து விட்டது. பயிற்சி எடுப்பதற்காகவே தமிழகத்திற்குத் துணை ராணுவம் வந்திருக்கிறது என பொய்க் காரணம் கூறப்படுகிறது. ஆனால், துணை ராணுவம் வந்திருப்பது நாசகார திட்டங்க ளுக்கு எதிரான மக்கள் போராட் டங்களை ஆயுத பலம் காட்டி அச்சுறுத்தி சிதைக்கவே என்பது அனைவரும் அறிந்த உண்மை," என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தபோதும், ஓகி புயலில் சிக்குண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தவித்தபோதும் துணை ராணுவப்படை வரவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது துணை ராணுவப்படை குவிக்கப்பட்டது ஜனநாயக மரபுக ளுக்கும், மக்களாட்சிக் கோட்பாட் டிற்கும் எதிரான சர்வாதிகார நட வடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

