சென்னை: லஞ்சம் பெற்றுக்கொண்டு மணல் கடத்தலை அனுமதிக்கும் பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மணல் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தமது கணவரை விடுவிக்கக் கோரி பாபு என்பவரின் மனைவி தொடுத்துள்ள வழக்கை விசாரித்தபோதே நீதிபதிகள் மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்தனர்.
"மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சாமானிய மக்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கடத்தலை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நாளைக்குள் தமிழக அரசும் காவல் துறையும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

