மும்பை: எட்டு லட்சம் ரூபாய்க்கு மின்சாரக் கட்டணம் வந்ததால் மன வருத்தம் அடைந்த காய்கறி வியாபாரி ஒருவர் தனது உயிரை விட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தின் புந்த்லிநகரில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெல்கி (36). இவர் தனது காய்கறி கடைக்கு வழக்கமாக மின்சார கட்டணமாக ஆயிரம் ரூபாய் கட்டி வந்தார். இந்த மாதம் அவருக்கு ரூ.8 லட்சத்துக்கு மின்சார கட்டணம் வந்திருந்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் உயிரை விட்டார்.
போலிசார் விசாரணையில், இரண்டாயிரம் ரூபாய்க்கு வந்த மின்சார கட்டணத்தை 8 லட்சம் ரூபாய் எனக் குறித்த மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் ஷெல்கி இறந்தது அவரது உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின்சார அளவில் தவறாக பதிவிட்ட ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டார் எனத் தெரிவித்தனர். ஆனால், ஷெல்கியின் உறவினர்கள் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வகையில் அவரது உடலைத் தகனம் செய்யமாட்டோம் என்று போராட்டம் நடத்தினர்.

