புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு முன் வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட உள்ள அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் எனப் பெயர் வைக்கவேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அதில், காவிரி பிரச்சினையில் இறுதி முடிவெடுக்க மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இந்த அறிக் கையை தாக்கல் செய்த மத்திய அரசு, இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என குறிப்பிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வரைவுத்திட்ட அறிக்கையானது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என கர்நாடக அரசு குறைகூறி உள்ளது.

