சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இதனால் அவரது கட்சித் தொண் டர்களும் ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நெய்வேலியில் தமிழர் கூட்டமைப்பு சார்பில் காவிரி பிரச்சினை தொடர்பாகப் போராட்டம் நடைபெற்றது.
அச்சமயம் நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு வேல்முருகன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய அவர், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் நெய்வேலி போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். வேல்முருகன் ஏற்கெனவே உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியைத் தாக்கிய குற் றச்சாட்டின் தொடர்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

