திண்டுக்கல்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற ஆடவரை திண்டுக்கல் போலிசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள சித்தையன்கோட்டை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார் 21 வயதான காசி மாயன். ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவிடக்கூடாது என்பதற்காக அதன் ஒயர்களைத் துண்டித்துள்ளார்.
எனினும் ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க முடியாததால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதுகுறித்துப் போலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கேமரா ஒயர்களைத் துண்டிக்கும் வரை நடந்தது அனைத்தும் ஏடிஎம் மையத்தில் உள்ள கணினியில் பதிவாகி இருந்தது. அக்காட்சிகளை வைத்து காசி மாயனைப் போலிசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

