விரார்: பள்ளிக் குழந்தைகளைக் காப்பதற்காக தன் உயிரை விட்ட வேன் ஓட்டுநரால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையை அடுத்த விராரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பிரகாஷ் பட்டில், 44, பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு விரார் அருகே உள்ள நரிங்கி பகுதியில் சென்று கொண் டிருந்தார். அப்பகுதியை ஒட்டி இருந்த கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறியதால் மூன்று அடி வரை தண்ணீர் தேங்கியது.
இதனால் கால்வாய்க்கும் சாலைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. எனவே குழந்தைகளை வேனில் இருந்து இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டுநர் கொண்டு சென்றபோது இரு குழந்தைகள் நீரில் விழுந்தனர். அவர்களை இழுத்துப் பிடித்து, சாலையின் பக்கம் நிற்க வைத்துள்ளார். ஆனால் கால்வாயின் நுனிப்பகுதியில் இருந்த பிரகாஷ் தவறி விழுந்ததில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். காவல்துறையினர் 20 நிமிடங்கள் தேடி 1.5 கி.மீ தொலைவில் பிரகாஷின் உடலை மீட்டனர்.

