மும்பை நகருக்குள் விழுந்து நொறுங்கிய விமானம், ஐவர் பலி

1 mins read
8dbc06e8-f646-4d90-be6e-0762dba7bd4f
-

மும்பையின் காட்கோபரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் சி-90 ரக தனியார் விமானம் ஒன்று கட்டடத்தில் மோதி, விழுந்து தீப்பற்றிய விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். இந்திய நேரப் படி நேற்று பிற்பகல் 1.30 மணி யளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பலத்த சத்தத்தோடு சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து திடீரென தீப்பிடித்தாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தவும் உள்ளே இருந்தவர் களை மீட்கவும் போராடினர்.

இரு விமானிகள், இரு விமானப் பராமரிப்பு பொறியாளர்கள், விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவரும் உயிரிழந்ததாக மும்பை போலிஸ் தெரிவித்தது. மும்பையின் ஜுஹு விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கியதாக அறியப்படுகிறது. விமானம் தீப்பிடித்து சிதறு வதற்கு முன்பாக அங்கு ஒரு மரத்தில் மோதியதாக அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கூறினர்.

கட்டுமானப் பகுதியில் விழுந்து எரிந்த விமானத்தைப் பார்வையிடும் தீயணைப்புப் படையினர். படம்: ராய்ட்டர்ஸ்