ஜெய்ப்பூர்: காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் பலரும் பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது பிணையில் வெளியே இருப்பதைச் சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பெயர் தற்போது மாறிவிட்டதாகவும் அதனை மக்கள் 'பிணை (ஜாமீன்) வண்டி' என அழைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியில் 'பைல் காடி' என்றால் மாட்டு வண்டி என்று பொருள். அதை சிலேடை யாகப் பயன்படுத்தும் வகை யிலேயே 'பெயில் காடி' எனக் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத் துக்குச் சனிக்கிழமை வந்த பிரதமர் மோடி மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது ராஜஸ்தானில் ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள 13 திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழாண்டு இறுதியில் அந்த மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்று இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரசியல் அரங் கில் குறிப்பிடத்தக்க நிகழ் வாகக் கருதப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே செயல் பட்டுவருகிறது. அதற்குச் சற்றும் குறையாமல் ராஜஸ் தான் அரசும் மக்கள் நலனில் அக்கறை செலுத்துகிறது.

