கருணாநிதி வீட்டில் குவிந்த தலைவர்கள்

கருணாநிதி வீட்டில் குவிந்த தலைவர்கள்

2 mins read
24cd3291-7578-4e58-891b-c3ce82ad3fe1
-

இந்திய நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதியின் உடல்நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு முதல் தமிழகத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. 94 வயதான கருணாநிதி வயது முதிர்ச்சி, தளர்ந்த உடல்நிலை காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வெடுத்து வந்தார்.

அவ்வப்போது ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந் தது. தொண்டை மற்றும் நுரையீரலில் நோய்த் தொற்று இருந்ததால் 'டிரக்கியோஸ்டமி' என்னும் சுவாசக் கருவி அவருக்குப் பொருத்தப்பட்டிருந்தது. இம்மாதம் 18ஆம் தேதி அந்தக் கருவி புதிதாக மாற்றப்பட்டது. அப்போது அவர் நல்ல உடல்நிலையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவ ருக்குக் காய்ச்சல் இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மருந்துகள் செலுத்தப்படு வதோடு அவரது கோபாலபுரம் வீட்டிலேயே மருத்து வர்கள் வந்து கவனித்துக்கொண்டுள்ளனர். 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. படுத்த படுக்கையில் இருக்கும் அவரது உடல் மெலிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய் யப்படுவதாகவும் அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்றும் சர்க்கரை அளவு சரியான விகி தத்தில் இருக்கிறது என்றும் ஊடகங்கள் குறிப்பிட் டன. எட்டு மணி நேரத்திற்கு ஒரு '‌ஷிப்ட்' என்ற அடிப்படையில் மருத்துவர்களும் தாதியரும் கருணா நிதி வீட்டில் தங்கியிருந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். உடல்நிலையைக் கவனத்தில்கொண்டு கருணாநிதியை மருத்துவர்கள் தவிர யாரும் சந்திக்கவேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

சில மாதங்களுக்கு முன் சிகிச்சை பெறுவதற்காக வாகனத்தில் சென்ற கருணாநிதி. கோப்புப் படம்