புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வரும் திரிணா முல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று நாடாளுமன்றத்தில் அத்வானி, 14 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியாவையும் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "அசாமில் நடத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு (என்ஆர்சி) என்பது மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன் மேற் கொள்ளப்பட்டுள்ளது. "இதன்மூலம் உள்நாட்டுப் போர் மூளும். நாட்டில் ரத்த ஆறு ஓடும். இந்த விவகாரம் பங்ளா தேஷுடனான இந்தியாவின் உறவைச் சீர்குலைக்கும்," என்று பாஜகவை எச்சரிக்கும் விதத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் பற்றி விமர்சனம் செய்து பேசியதற்காக மம்தா பானர்ஜி மீது அசாம் போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அசாமில் உள்ள பாரதிய ஜனதா யுவமோர்ச்சா எனும் அமைப்பு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அதன் பேரில் மம்தா பானர்ஜி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டி விடுவதாக மம்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

