பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களில் இப்போது பெரும் கவனம் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், சிங்கப்பூர் அதைவிட மோசமாக மின்னணுக் கழிவுப் பாதிப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று முன்தினம் தெரிவித்தார். மின்னணுக் கழிவுகள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அதை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதை அப்புறப்படுத்தி நீண்டகாலத்திற்கு அப்படியே விட்டுவிடுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மாறாக, பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை முறையாக சேகரித்து அவற்றை நாம் எரித்துவிடுகிறோம் என்றாரவர். வருடாந்திர சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றத் தலைமைத்துவ கலந்துரையாடல் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அமைச்சர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். சிங்கப்பூர் ஆண்டுக்கு 1.76 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவை பேரங்காடிகளைச் சேர்ந்த பைகளாகும்.

