சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 143,000 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது. கர்நடாகா, கேரள மாநிலங் களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து மிக அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. விநாடிக்கு 143,000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இரண்டு நாட்களில் மேட்டூருக்கு வரும் என தெரிகிறது. இந்நிலையில், மேட்டூர் அணை யிலிருந்து ஏற்கெனவே காவிரியில் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் 30,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு கூடி வருகிறது.
இதன் காரணமாக தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கவும் முன்னேற்பாடுகளைச் செய்யவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அவசரமாக அறிவுறுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து கிருஷ்ண கிரி, தர்மபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் காவிரி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்குத் தண்டோரா மூலம் வெள்ளம் பற்றி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. படம்: தமிழக ஊடகம்

