சென்னை: தேசத்துரோக வழக்கில் கைதாகியுள்ள 'மே 17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சட்டவிரோதக் கும்பலுடன் தொடர்பிருப்பதாகப் போலிசார் குற்றம் சாட்டியுள்ளனர். அண்மையில் பெங்களூருவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரைச் சிறைக்கு அனுப்ப முடியாது என நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். திருமுருகன் கைது தொடர்பாக காவல்துறையிடம் அவர் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார். எனினும் மற்றொரு வழக்கு தொடர்பில் போலிசார் மீண்டும் திருமுருகன் காந்தியை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள சட்டவிரோதக் கும்பலுடன் திருமுருகன் காந்திக்குத் தொடர்புள்ளதாகப் போலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது. அந்தக் கும்பல் மூலம் தனது இயக்கத்துக்கு நிதி திரட்டும் செயலில் அவர் ஈடுபட்டாரா? எனப் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

