சென்னை: காலஞ்சென்ற திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்திருக்காவிட்டால் தம்மையும் அவருக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என திமுக செயற் குழுக் கூட்டத்தில் பேசியபோது மு.க. ஸ்டாலின் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார். மேலும் கருணாநிதியை மெரி னாவில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கக் கோரி, வெட்கத்தை விட்டு முதல்வர் பழனிசாமியின் கைகளைப் பிடித்துக் கெஞ்சியதாக வும் அவர் குறிப்பிட்டார். திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்துப் பேசிய ஸ்டா லின் கருணாநிதி மறைந்தபோது தமிழக அரசு பலவிதமாக அலைக் கழித்தது என்று குற்றம் சாட்டினார். அறிஞர் அண்ணாவின் அரு கில் தாம் அடக்கம் செய்ய வேண் டும் என்பதே கருணாநிதியின் ஆசை என்று குறிப்பிட்ட ஸ்டா லின், திமுகவினர் தங்கள் தலை வரை இழந்திருக்கிறார்கள் என் றால், தாம் தந்தையையும் இழந்து நிற்பதாக சோகத்துடன் தெரிவித் தார். "கையைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டும் விதிமுறைப்படி மெரினா வில் இடம் கொடுக்க வாய்ப்பில்லை என்றார் முதல்வர். மெரினாவில் இடம் கிடைத்ததற்கு வழக்கறிஞர் குழுதான் காரணம். பெரிய சோகத்திலும் கிடைத்த ஒரு மகிழ்ச்சி என்றால் அது நீதிமன்றத் தீர்ப்புதான்," என்றார் ஸ்டாலின்.
செயற்குழுக் கூட்டத்தின்போது கருணாநிதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின். படம்: சதீஷ்

