திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாரிசுகளைக் களமிறக்கி பலத்தைச் சோதித்துப் பார்ப்பது குறித்து கருணாநிதி குடும்பத்தினர் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தமிழக சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது. ஐந்து முறை தமிழக முதல்வ ராக இருந்த கருணாநிதியின் மறைவை அடுத்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ வான ஏ.கே.போஸ் திடீரென கால மானதையடுத்து அத்தொகுதியும் காலியானது. இவ்விரு தொகுதி களுக்கும் விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பு, அழகிரி தரப்பு என இரு பிரிவாக இருந்து வரும் திமுக, அவ்விரு தொகுதிகளிலும் அவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு தருவது பற்றி யோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி, திருவாரூர் தொகு தியில் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி களமிறக்கப் படலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.
அண்மைக்காலமாக திமுக மேடைகளில் அதிகம் தலைகாட்டி வருகிறார் உதயநிதி. அதனால் 'தாத்தாவின் தாய்மண்ணில் இருந்து பேரனின் அரசியல் பயண மும் தொடங்கட்டும்' என ஸ்டாலின் குடும்பத்தினர் சிலர் விரும்புகிறார் களாம்.
கடந்த இரு தேர்தல்களிலும் திருவாரூரில்தான் கருணாநிதி போட்டியிட்டு வென்றார். 13 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றதும் அத்தொகுதியில்தான்.
ஆகையால், கருணாநிதிக்கு அளித்த அதே ஆதரவை உதய நிதிக்கும் திருவாரூர் தொகுதி வாக்காளர்கள் அளிப்பர் என்று அவரது நட்பு வட்டாரம் நம்புகிறது. இருந்தாலும், 'கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்' என்று அழகிரி கூறியதால் வெகுண்டுபோயுள்ள ஸ்டாலின், இப்போதைக்குத் தன் மகனைத் தேர்தலில் களமிறக்க மாட்டார் என்றும் திமுகவின் ஒரு சாரார் கூறுகின்றனர்.

