ஜம்மு: இந்தியாவின் வடமாநிலங் களான இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், வடமாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் பெரும் பாலான பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் மலைப் பகுதி கிராமங்களான கட், கண்டி, கியுஞ்சா பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. பதான்கோட் = தால்ஹவுசி இடையேயான தேசிய நெடுஞ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் டேராடூன், ஹரித்துவார், பூரி, நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர்.
தாழ்வான பகுதியில் உள்ளவர் கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழையால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ராம்பன் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் ஸ்ரீநகர்=ஜம்மு இடை யேயான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையைச் சீர்செய்வற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 10 நாட்களுக்குக் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட், மேற்கு உத்தரப் பிரதேசம் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

