காஷ்மீரில் ஒரே நாளில் போலிஸ் காரர்களின் உறவினர்கள் 10 பேரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டதையடுத்து அங்கு உச்சக்கட்ட விழிப்புநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதனிடையே, அந்த மாநிலத்தில் பயங்கரவாதிகள் இரண்டு பேரும் போலிஸ்காரர்கள் நான்கு பேரும் வியாழக்கிழமை கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான சையது சலாஹூதீனின் புதல்வர் கைதான தற்கு அடுத்த நாள் வன்செயல்கள் நிகழ்ந்தன.
இந்தச் சூழலில் பயங்கரவாதி கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் பல போலிஸ்காரர்களின் வீடுகளில் புகுந்து அங்கிருந்தவர் களைக் கடத்திச்சென்றுவிட்டனர். அவர்கள் காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான், குல் காம், அனந்த்நாக் மற்றும் அவந்தி போரா ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் ஆறு போலிசாரின் குடும்ப உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப் பட்டது. கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து உறவினர்களை மீட்க போலிஸ் பெரும் வேட்டையைத் தொடங்கி உள்ளது. காஷ்மீரில் பாதுகாப்புப் படை யினரின் குடும்ப உறுப்பினர்களை இதற்கு முன்னதாக பலமுறை பயங்கரவாதிகள் இலக்குவைத்து செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகருக்கு வடக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் இருக்கும் ஹாஜின் என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

