கடலூர்: ரூ.25,000 லஞ்சம் வாங்கியதன் தொடர்பில் சில தினங்களுக்கு முன் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் ஏழு வங்கி லாக்கர்களில் இருந்து 13 கிலோ தங்க நகைகளை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். "மொத்தம் ஏழு வங்கி லாக்கர் களில் நடந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்தது.
"அதிகாரி பாபுவின் ஏழு வங்கி லாக்கர்களில் இருந்து 13 கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி, வைர நகைகள் வாங்கிய ஆவணங்கள், ரூ.10 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "பாபுவின் பெயரில் உள்ள 45 வங்கி சேமிப்புக் கணக்குகளிலும் எவ்வளவு பணம் 'டெபாசிட்' செய் யப்பட்டுள்ளது என்பதை கணக் கிடும் பணியும் தொடர்கிறது," என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் தெரிவித்தனர்.
கடலூர் செம்மண்டலம் தவுலத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 55. இவர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணி யாற்றி வந்தார்.
கடந்த 11ஆம் தேதி சுற்றுலா வேனுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்க ரூ.25,000 பணத்தை பாபு லஞ்சமாக வாங்கியபோது விழுப் புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் அவரைக் கையும் களவு மாக கைது செய்தனர். பாபுவுக்கு உடந்தையாக இருந்த செந்தில் குமார் என்பவரும் கைதானார்.
இதைத்தொடர்ந்து பாபுவின் பெயரில் இருந்த 21 வங்கிக் கணக்குகளையும் அவரது மனைவி மங்கையர்க்கரசி பெய ரில் இருந்த ஏழு வங்கி லாக்கர் களையும் உதவியாளர் செந்தில் குமாரின் வங்கி கணக்குகளையும் காவல்துறையினர் முடக்கினர். கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியபோது ரூ.30,17,000 ரொக்கத்தைப் போலிசார் கைப்பற்றி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

