சென்னை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ். இந்நிலையில் அவரை மூன்றா வது முறையாகக் கைது செய்ய போலிசார் நடவடிக்கை மேற் கொண்டிருப்பதாகக் கூறப்படு கிறது. முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகப் போராடியது ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் பேரில் கருணாஸ் மீது ஏற்கெனவே இரு வழக்குகள் பதிவாகி உள் ளன. இதையடுத்துக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சில தினங்களுக்கு முன்புதான் பிணை பெற்று அவர் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் நெல்லையில் நடைபெற்ற ஒரு மோதல் சம்பவம் தொடர்பாக கருணாஸ் மீது கடந்தாண்டும் ஒரு வழக்குப் பதிவாகி இருந்தது.
அந்த வழக்கில் அவரைத் தற் போது கைது செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சபாநாயகர் தனபால் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், இதனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி அவர் சார்பில் சட்டப் பேரவைச் செயலரிடம் மனு அளிக் கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கருணாஸ். தன்னையும், தமது ஆதரவாளர் களையும் குறிவைத்து காவல் துறை பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் தொடர்ந்து பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து வரு வதாக கருணாஸ் சாடியுள்ளார்.

