தமிழர்களின் நிலங்களை ஆண்டிறுதிக்குள் திரும்ப ஒப்படைக்க இலங்கை அதிபர் உத்தரவு

2 mins read

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் நிலங்களை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போர்க்காலத்தின்போது ராணுவத் தேவை களுக்காக வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இருந்த தமிழர்களின் குடியிருப்பு, வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

போர் முடிவுக்கு வந்ததை அடுத்து குறிப்பிட்ட சில நிலப்பகுதிகள் அவற்றின் உரிமையாளர் களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளான பின்னரும் இன்னும் ஏராளமான தமிழர்களின் குடியிருப்பு, வேளாண் நிலங்கள் ராணுவத்தின் வசம் இருப்பதைச் சுட்டி, அவை உடனே விடுவிக்கப் படவேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிபர் சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கெப்பப்பிளவு பகுதியில் பல நூற்றாண்டுகளாக, பல தலைமுறை களாக உள்ளூர்வாசிகளிடம் இருந்த 75 ஏக்கர் நிலப்பகுதியில் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு தொடர்வதாகக் கூறப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலப் பகுதிகளில் 85 விழுக்காட்டிற்கும் மேல் உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டுவிட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் சிறிசேன அப்போது தெரிவித்திருந்தார்.

இருப்பினும், மக்களிடையே இணக்கமான போக்கு நிலவவும் தேசிய ஒருமைப்பாட்டை அடையவும் வேண்டுமெனில் ராணுவ வசமுள்ள அனைத்து நிலங்களையும் உடனடியாக உரியவர்களிடம் ஒப்ப டைக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத் தியது.

இவ்வாண்டில் முன்னதாக கிழக்கு மாநிலத்தில் ராணுவம் ஆக்கிரமித்திருந்த தமிழர்களின் 800 ஏக்கர் நிலப்பகுதியை அவர் களிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு செய்திருந்தது.