மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு எப்படியாவது தாங்களே முதல்வராகிவிட ஓ பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் திட்டம் போட்டிருந்தது அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சுமத்திக்கொண்டுள்ள குற்றச் சாட்டுகள் மூலம் அம்பலமாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆட் சியைக் கவிழ்க்க டிடிவி தினகரன் என்னிடம் பேரம் பேசினார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ள அதே வேளையில், பாஜகவோடு இணைந்து எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு முதல்வர் ஆகிவிடலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கனவு கண்டார் என்று டிடிவி தினகரன் தெரிவித் துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஏற்கெனவே சந்தித்ததாகவும் தற்போது சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாக வும் ஓபிஎஸ் குறித்து வெளியாகி யிருக்கும் தகவல் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி தினகரன் தரப்பு கிளப்பி யிருக்கும் இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பழனிசாமி தரப்பு இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவ னித்து வருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்குவதை இந்த விவகாரம் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. "ஒருசில ஆட்களை அனுப்பி எங்களோடு சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிடலாம்," என்று பன்னீர் செல்வம் தூதுவிடுகிறார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச் செல்வன் அளித்துள்ள பேட்டியில், "டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் 2017 ஜூலை 12ஆம் தேதி, கோட் டூர்புரம் இல்லத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து பேசினர். "அவர்கள் சந்தித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி புகைப் படக் கருவி ஆதாரம் என்னிடம் உள்ளது. அந்த ஆதாரத்தை உரிய நேரத்தில் கொடுப்பேன். "ஓ.பன்னீர்செல்வத்தின் உற வினர் இப்போதும் தினகரனுடன் பேசிக்கொண்டுதான் உள்ளார். "கடந்த வாரம் தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டார். எடப்பாடி ஆட்சியைக் கலைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை. ஆட்சியைக் கலைக்கவே அவர் சந்திப்பிற்கு அனுமதி கேட்டார்," என்றார்.

