தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் விடுத்த 'சிவப்பு எச்சரிக்கை' மீட்டுக் கொள்ளப்பட்டாலும் நாளை வரை தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டு உள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங் களில் அதிக கனமழை பெய்யும் என்று 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டு இருந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறி ஓமனை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நேற்று கூறியுள்ளார்.
இந்தப் புயல் சின்னம் காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப் பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் மழைப் பொழிவு உள்ளது. நேற்று முன் தினம் இரவு முழுவதும் சென்னை, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்ததாகவும் மாநிலத்தின் சில பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதாகவும் கூறப்பட்டது.

