இடைவிடாமல் கத்திய பூனையால் உயிர் பிழைத்த நால்வர்

1 mins read

வத்தலக்குண்டு: கனமழை நீடித்த வேளையில் வீட்டிலிருந்த வளர்ப்புப் பூனை இடைவிடாமல் கத்தியதால் நான்கு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது. வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த 48 வயதான கோவிந்தன், தன் மனைவி, மகன், மகளுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணி அளவில் கனமழை பெய்துகொண்டிருந்தபோது கோவிந்தன் குடும்பத்தார் வளர்த்து வரும் பூனை வழக்கத்துக்கு மாறாக பலத்த சத்தம் எழுப்பியது. இதனால் தூக்கம் கலைந்து எழுந்த கோவிந்தன் குடும்பத்தார் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அச்சமயம் அவரின் வீட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. பூனை சத்தம் போட்டதால் அதைப் பார்க்க வெளியே வந்ததையடுத்து நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். பூனைதான் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாக நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் கோவிந்தன்.