சென்னை: தன்மீதான குற்றச் சாட்டு முழுக்க முழுக்கப் பொய் என்று கவிஞர் வைரமுத்துத் தன்னிலை விளக்கம் அளித்து காணொளி வெளியிட்டுள்ள நிலையில், பாடகி சின்மயி "வைர முத்துவிடம் உண்மைக் கண்டறி யும் சோதனை நடத்தப்பட வேண் டும். அதுதான் சரியானது," என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தன்மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள பிரபல பாடகி சின் மயிக்கு ஒரு சிறு விளக்கத்தைத் தவிர எந்தவித மறுப்பும் இதுவரை தெரிவிக்காமலேயே இருந்து வந்த கவிஞர் வைரமுத்து, ஏறக்குறைய ஒரு வாரம் ஆன நிலையில் தனது மௌனத்தை கலைத்து இப்போது மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள காணொளி பதிவில் வைரமுத்து பேசியுள்ளார்.
"வணக்கம். என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என்மீது வழக்குத் தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒரு வாரகாலமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன்.
"அசைக்க முடியாத ஆதாரங்களைத் தொகுத்து, திரட்டி வைத்துள்ளேன். நீங்கள் வழக்குப்போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா... கெட்டவனா? என்று இப்போது யாரும் முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலைவணங்குகிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், வைரமுத்துவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார். ஆண்களால், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் 'மீ டூ' என்ற 'ஹேஸ்டேக்'கில் கருத்து களை பகிர்ந்து வரும் நிலையில், பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள், தங்களின் குறைகளைக் கூற 'வி டூ மென்' என்ற ஹேஸ்டேக்கை இயக்குநர் வாராகி துவக்கியுள்ளார்.

