'இண்டிகோ' விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; பயணி கைது

'இண்டிகோ' விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; பயணி கைது

1 mins read

மும்பை: மும்பை 'இண்டிகோ' விமானத்தில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவுகொடுத்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ராஜு கங்கப்பா, 28, என்பவர் மும்பையிலிருந்து பெங்களூ ருக்குப் புறப்படும் விமானத்தில் இருந்த பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாகக் கூறப்படுகிறது. சென்ற செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்தில் அவர் பெண் ஊழியர் மீது கை வைத்துப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உடனே பணிப்பெண் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட் டார். ஆனால் பணிப்பெண் மீண்டும் திரும்பி வரும்போது அதே போன்று பாலியல் குறும்பில் ராஜு ஈடுபட்டுள்ளார்.

இதனால் பணிப்பெண் மற்ற ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தைக்கூற, உடனே மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் ஏறிய பாதுகாப்புப் படையினர், ராஜுவை அவரது உடமைகளுடன் கீழே இறக்கினர். அதன் பிறகே விமானம் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே மும்பை விமான நிலைய காவல்நிலையத்தில் ராஜு ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையினர் அவர் மீது பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது, இழுக்கு ஏற்படுத்தியது தொடர்பில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவரை காவல்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டது.