மாயமான பத்திரிகையாளர் காஷோகி கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்டது சவூதி

மாயமான பத்திரிகையாளர் காஷோகி கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்டது சவூதி

2 mins read

பத்திரிகையாளர் ஜமால் காஷோகி (படம்) கொல்லப்பட்டது உண்மைதான் என சவூதி அரேபியா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இம்மாதம் 2ஆம் தேதி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்திற்குச் சென்ற காஷோகி, அங்கிருந்து வெளியில் வராததால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. ஆயினும், சவூதி அரசாங்கம் அதை மறுத்து வந்தது. இந்த நிலையில், சவூதி குடிமகனான காஷோகி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த சண்டையின்போது கொல்லப்பட்டதாக சவூதி அரசாங்க வழக்கறிஞர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

"சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை சவூதி நாட்டவர் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவரசர் முகம்மது பின் சல்மானின் ஆலோசகர் சௌத் அல் கத்தானியும் புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அகமது அசிரியும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சவூதி அரசராக அடுத்து முடிசூடவுள்ள இளவரசர் முகம்மது பின் சல்மானை காஷோகி தொடர்ந்து விமர்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சவூதியின் ஒப்புதலை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார். அதே நேரத்தில், சவூதி மீது அமெரிக்கா எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

"இவ்விவகாரத்தில் சவூதியின் உள்நாட்டு விசாரணைகளைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிப்போம்," என்றார் அவர். இதனிடையே, காஷோகி கொல்லப்பட்டது உறுதியான நிலையில் சவூதி மீது பொருளியல் தடைகள் விதிக்கப்படலாம் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் கூடி விவாதிக்கலாம் என்றும் அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.