கோயில் உரிமை: ஆதிவாசிகள் போர்க்கொடி

கோயில் உரிமை: ஆதிவாசிகள் போர்க்கொடி

1 mins read

சபரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு இருந்த அதிகாரத்தை, உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், அப்படி செய்தால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்று ஆதிவாசி மக்கள் புதிய போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆதிவாசி கோத்ர மகாசபா இந்த கோரிக்கையை வைத்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டு வரை சபரிமலையில் பூஜை செய்வது தொடங்கி கோவிலைப் பராமரிப்பது வரை அனைத்தையும் ஆதிவாசி மக்கள்தான் கவனித்து வந்தனர். மலையராய இன ஆதிவாசி மக்கள்தான் அங்கு வழிபாடு நடத்தி வந்தனர் என்று கூறப்படுகிறது. அதன்பின் வந்த பிராமணர்கள் அந்த உரிமையைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மலையராய மக்களுக்கு கோவில் உரிமை பறிக்கப்பட்டது என்றும் அதன்பின் மலையராய மக்கள் மொத்தமாக பூஜை செய்யும் பணியில் இருந்தே நீக்கப்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. மலையராய மக்கள் இருந்த சமயத்தில் அந்த கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்றும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிப்பதாகக் கூறி, அந்தக் கோயிலின் உரிமையைத் தங்களுக்கு வழங்கினால் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்வது தொடர்பான பிரச்சினையும் சரியாகும் என ஆதிவாசி கோத்ர மகாசபா கூறியுள்ளது.