தமிழ்நாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் தலை எழுத்தை நிர்ணயிப்பதாக இருக்கும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற இந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை ஜூன் மாதம் முடிவடைந்து இருவிதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
அதனைத் தொடர்ந்து புதிய தீர்ப்பு வழங்கும் பொறுப்பு மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணனிடம் வழங்கப்பட்டது. அவர் வழக்கு விசாரணையை முடித்துவிட்ட நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம் என்று வெளியான தகவல்களைத் தொடர்ந்து தினகரன் தரப்பினர் 18 எம்எல்ஏக்களையும் பத்திரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தற்போது குற்றாலத்தில் உள்ளனர். பழைய குற்றாலத்தில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்ட அவர்கள் நேற்று ஐந்தருவி சாலையில் உள்ள வேறொரு ஹோட்டலுக்கு மாறினர். அந்த 18 பேலைரயும் அதிமுக பிரமுகர்களோ அரசாங்க அதிகாரிகளோ தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு உள்ளன. முன்னதாக, நல்ல தீர்ப்பு வரவேண்டும் என வேண்டி இசக்கி சுப்பையாவின் வீட்டில் நடைபெற்ற யாகத்தில் 18 பேரும் கலந்துகொண்டனர்.

